முக.ஸ்டாலின் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு

வேலூர் மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண மேட்டூர்கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்தாவிட்டால், சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவோம் என்று தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தி.மு.க சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மு.க.ஸ்டாலின் பேசியது:

சுமார் ரூ.1,300 கோடியில், மேட்டூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தி.மு.க அரசால் 31.12.2010-இல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆய்வுப் பணியை

அடுத்து 21.5.2011-இல் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதனால், வேலூர் மாவட்டத்தில், வேலூர் மாநகரம், 11 நகரங்கள், 5 பேரூராட்சிகள், 944 ஊரகக் குடியிருப்புகள் ஆகியவற்றுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரை இரு ஆண்டுகளுக்குள் வழங்க வேண்டும் என திட்டமிடப்பட்டது.

இந்தத் திட்டத்தை அ.தி.மு.க அரசு 2012-க்குள் நிறைவேற்றியிருக்க வேண்டும் ஆனால், திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், 75 சதவீதப் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் உண்மையை மறைத்து ஏப்ரல் 16-இல் குடிநீர் வழங்குவோம் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்: தவறுகளை மூடி மறைக்க இந்த ஆட்சி முயற்சிக்கிறதே தவிர, மக்களுக்கானத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை. தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகே வேலூர் மாவட்ட மக்களுக்கு மேட்டூர் கூட்டுக் குடிநீர் முழுமையாகக் கிடைக்கும் என்ற நிலை இன்றைக்கு காணப்படுகிறது. குடிநீர்ப் பிரச்னைக்கு இந்த அரசு உடனடியாக தீர்வு காணாவிட்டால் அடுத்தகட்டமாக சிறை நிரப்பும் போராட்டத்தை நான் பங்கேற்று நடத்தத் தயாராக உள்ளேன்.